கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு செப்.14ல் தண்ணீர் திறப்பு: தெலுங்கு கங்கை திட்ட குழு கூட்டத்தில் ஆந்திரா உறுதி

சென்னை: சென்னை மாநகர குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பர் 14 முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப குழு கூட்டத்தில் ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது. தெலுங்கு கங்கை திட்டம் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்தில் தரவேண்டும். ஆனால் பருவமழை குறைந்ததால் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு கங்கா திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டம் நேற்று திருப்பதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆந்திர மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசு சார்பில் நீர்வளப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வள பிரிவு தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஆந்திர அரசு சார்பில் செப்டம்பர் 14ம் தேதி முதல் தண்ணீர் தமிழகத்திற்கு தரப்படும் அல்லது கண்டலேறு அணையில் 30 டிஎம்சி எட்டியவுடன் தண்ணீர் தரப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது ஆந்திரா தரப்பில் தமிழக அரசு சார்பில் தர வேண்டிய ரூ.362 கோடி பாக்கி தொகையை தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் விரைவில் பாக்கி தொகையை தர நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கூறியதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: