பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 48ம் ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதையும் மீறி வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆலயத்தின் 48ம் ஆண்டு திருவிழா நேற்று வெகுவிமரிசையாக தொடங்கியது. மாலை 5.45 மணி அளவில் கோயில் வளாகத்தில் உள்ள 75 அடி உயர வெண்கல கொடி கம்பத்தில் 12 அடி நீளமுள்ள அன்னையின் திருவுருவம்  தாங்கிய கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.

சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை வகித்து, கொடியினை ஆசீர்வதித்து மாலை 5.45 மணிக்கு கொடியேற்றி வைத்தார். இதையடுத்து பலூனால் ஆன ஜெப மலை மற்றும் பலூன்கள்  பறக்கவிடப்பட்டன. நிகழ்ச்சியில், ஆலய பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை உட்பட ஆலய தந்தைகள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயில் விழாக்கள் நடத்த தடை உள்ளதால், இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.   

தொடர்ந்து 30ம் தேதி (இன்று) இளைஞர்கள் நாள், நாளை 31ம் தேதி உலக அமைதி நாள், செப்டம்பர் 1ம் தேதி இறையழைத்தல் நாள், 2ம் தேதி பக்த சபைகளின் நாள், 3ம் தேதி கொரோனா- முதல்நிலை பணியாளர் நாள், 4ம் தேதி உழைப்பாளர்கள் நாள், 5ம் தேதி ஆசிரியர்கள் நாள், 6ஆம் தேதி நற்கருணை நாள், 7ம் தேதி அன்னையின் தேர் நாள், 8ம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா மற்றும் அன்னைக்கு முடிசூட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். முடிவில் கொடி இறக்கத்துடன் விழா முடிகிறது.     

இந்த ஆண்டு பெருவிழா அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. மேலும் கொடி நாள் அன்று கொடி ஊர்வலமும் இல்லை. இந்த பத்து நாள் நிகழ்ச்சிகளையும் பக்தர்கள் அனைவரும் அவரவர்கள் வீட்டிலிருந்தே மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி மூலம் காணலாம் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் ஒரு சில பக்தர்கள் வீடுகளில் இருந்து நடந்தே, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு வந்தனர். அவர்களை வழியில் மறித்த போலீசார் திருப்பி அனுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: