மாநகராட்சியின் கீழ் பணியாற்றிய நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கீழ் களப்பணியாளர்களை மாற்றியது ஏன்? வெளிப்படையாக அறிவிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: மாநகராட்சியின் கீழ் பணியாற்றிய களப்பணியாளர்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கீழ் மாற்றியது தொடர்பாகவும், களப்பணியாளர்கள் தொடர்பாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுமார் 13 ஆயிரம் களப்பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஈடுபடுத்தி வருகிறது. இவர்கள் பெரும்பாலானவர்களுக்கு 60 நாட்களாக ஊதியம் வழங்கவில்லை. இந்த களப்பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி 89 நாட்கள் மட்டும் நேரடியாக சம்பளம் கொடுத்து விட்டு, தற்போது அவர்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் ஊழியர்களாக மாற்றிவிட்டது.  

ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் 20 களப்பணியாளர்களுக்கு மிகாமல் வைத்துள்ளனர். காரணம் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்புநிதி மற்றும் இன்சூரன்ஸ் போன்றவை வழங்கப்பட வேண்டும். இத்தகைய உரிமைகள் களப்பணியாளர்களுக்கு கிடைக்காமல் இருப்பதை தடுப்பதற்காகவே குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் பிரித்து கொடுத்துள்ளது. எத்தனை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவர்களின் கீழ் எவ்வளவு ஊழியர்கள் இருக்கின்றனர் போன்ற விவரங்களை சென்னை மாநகராட்சி தெரிவிக்கவில்லை.

கொரோனா தொற்று இன்னும் எவ்வளவு நாட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசுக்கே தெரியாதபோது பேரிடர் காலத்தில் களப்பணியாளர்களாக பணியாற்ற வந்திருக்கும் ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பாதுகாப்பு உடை, உபகரணங்கள், அரசு அறிவித்த நிவாரணம் பெறுவதற்கு ஏற்ற வகையில் களப்பணியாளர்களை கூட்டு காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சி வெளிப்படைத்தன்மையோடு இயங்குவதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: