உதிரிபாகம் வழங்க கமிஷன் மின்வாரிய கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் கடப்பேரி பகுதியில் மின்வாரிய கிடங்கு உள்ளது. இங்கிருந்து எலக்ட்ரானிக் மீட்டர், டிரான்ஸ்பார்மர் மற்றும் உதிரிபாகங்கள், மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு விநியோகம் செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கு குறிப்பிட்ட தொகை பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 27ம் தேதி வெளியானது. இதன் எதிரொலியாக, மின்வாரிய உயர் அதிகாரிகள், இந்த மின்வாரிய கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, கிடங்கில் எவ்வளவு உதிரிபாகங்கள் இருப்பு உள்ளது, எந்தெந்த அலுவலகங்களுக்கு எவ்வளவு உதிரிபாகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது, என பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிடங்கு பொறுப்பாளர் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர்களிடமும் விளக்கம் கேட்டனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘கிடங்கில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யும்போது ஒவ்வொரு பொருட்களுக்கும் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவது பற்றி தொடர்ந்து புகார் வந்தபடி இருந்தது. இதனையடுத்து, கிடங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மின்வாரிய கிடங்கிலிருந்து உதிரிபாகங்களை வழங்க யாரேனும் பணம் கேட்டால் தலைமை அலுவலகத்தில் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்,’’ என்றனர்.

Related Stories: