கண்ணகிநகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் போதைப் பொருள்கடத்தல்காரர்களின் புகலிடமாகவும், குற்றங்களின் கூடாரமாகவும் உள்ளதா ?: தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ்!!

சென்னை : சென்னையில் உள்ள சில பகுதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த பெண் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி , நாவலூர் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அவர்கள் சென்னையில் இருந்து குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டவர்கள் என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினார். சென்னையில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி அன்றாட பிழைப்புக்காக கஞ்சா விற்பனை செய்வது  போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பெரும்பாலான குற்ற வழக்குகள் கண்ணகி நகர் பகுதியில் வசிப்பவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் சமூக நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து சேர்க்கிறோம்.

இப்பகுதிகளில் வசிப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, குற்றங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா, அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளனவா, அவர்களின் அன்றாட வருவாயை பெருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?குறிப்பாக கண்ணகிநகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாகவும், குற்றங்களின் கூடாரமாகவும் உள்ளதா என்பது குறித்தும் தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

Related Stories: