கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு!: சிறையில் உள்ள சயான், மனோஜை ஜாமினில் விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலித்தாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரது மறைவிற்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு பல்வேறு ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் நிலையத்தினர், சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்கள். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகியோர் ஏற்கனவே ஜாமீன் பெற்ற நிலையில், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் சேர்ந்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேட்டியளித்து கலவரத்தை தூண்டுகிறார் என காவல்துறையினர் தெரிவித்து, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சயான், மனோஜ் ஆகிய இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். ஏற்கனவே இவர்களின் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது காவல்துறையினர் தரப்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்புடைய 4 சாட்சிகளை சயான், மனோஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே மிரட்டியுள்ளனர். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அரசு தரப்பு சாட்சியங்களை மிரட்டக்கூடும். மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆதனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டனர். அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சூழ்நிலையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தனர். இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டால் விசாரணை பாதிப்படையும் என குறிப்பிட்டு சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: