தொடர் மழைப்பொழிவிலும் உயராத நீர்மட்டம் சண்முகாநதி அணை நீர்வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்

உத்தமபாளையம்: சண்முகாநதி அணை நீர்வரத்து பகுதிகளை ஆக்கிரமித்து, விவசாயம் செய்வதால், தொடர் மழை பெய்தாலும் அணைக்கு தண்ணீர்  வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உத்தமபாளையத்தை அடுத்த ராயப்பன்பட்டி அருகே சண்முகாநதி அணை உள்ளது. இதன் உயரம் 52.5 அடி. ஹைவேவிஸ், மணலாறு, மேல்மணலாறு,  ராயப்பன்பட்டி மேற்குதொடர்ச்சி மலையடிவாரங்களில் மழை பெய்தால், அணைக்கு நீர்வரத்து ஏற்படும். நீர்மட்டம் உயரும்போதுசீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, கன்னிசேர்வைபட்டி, ஆனைமலையன்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். மேலும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

இந்நிலையில், அணையின் நீர்வரத்து பகுதிகளில் நிலத்தை வாங்கி அதில் கிணறு, குட்டைகளை வெட்டி தண்ணீர் தேக்குகின்றனர். அணைக்கு வரும்  தண்ணீரின் போக்கை மாற்றி தங்களது நிலங்களை வளமாக்குகின்றனர். ஹைவேவிஸ் எஸ்டேட் மேல்புறம் சண்முகாநதிக்கு வரக்கூடிய காட்டாற்று  வெள்ளப்படுகைகள், கால்வாய்களின் நீர்ப்போக்கை தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் திருப்பிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக  போதிய மழை பெய்தும், அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையின் தற்போதைய நீரமட்டம் 26.25 அடி. நீர்வரத்து முற்றிலும் இல்லை. இது குறித்து உத்தமபாளையம்  பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: