7 மாதமாக உதவித்தொகை நிறுத்தம் பசி, பட்டினியுடன் பரிதவிக்கும் பாட்டி : சின்னாளப்பட்டியில் பரிதாபம்

சின்னாளபட்டி:  சின்னாளபட்டியில் 7 மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மூதாட்டி பசி பட்டினியுடன் தவித்து வருகிறார்.திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியத்தம்மாள் (75). ஆரம்பத்தில் நெசவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்தார்.  இவரது கணவர், 3 மகன்கள் இறந்து விட்டனர். ஒரு மகள் மட்டும் வெளியூரில் வசிக்கிறார். ஆதரவற்ற நிலையில் உள்ள பாக்கியத்தம்மாள், முதியோர்  உதவித்தொகை பெற்று வாழ்க்கையை கடத்தி வந்தார். அந்த தொகையையும் மொத்தமாக அப்பகுதியை சேர்ந்த சிலர் பறித்துக்கொண்டு விரட்டினர்.  இதன்பிறகு திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டது. கடந்த 7 மாதமாக உதவித்தொகை கிடைக்கவில்லை.

இதனால் பட்டினியில் வாடிய பாக்கியத்தம்மாள், வேறு வழியின்றி மேட்டுப்பட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில் வாசலில் பிச்சை எடுக்க  தொடங்கினார். ஆனால், கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல் இந்த கோயில் பூட்டி கிடக்கிறது. இதனால் பாக்கியம்மாள் கோயில்  எதிரே உள்ள கட்டிட வாசலில் தங்கியிருக்கிறார். மனிதநேயம் உள்ள ஒரு சிலர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். மழை  பெய்தாலும், வெயில் அடித்தாலும் இங்குதான் கிடக்கிறார். மூதாட்டி பாக்கியத்தம்மாள் கூறுகையில், ‘‘எனக்கு வந்து கொண்டிருந்த முதியோர் உதவித்தொகையை 7 மாதங்களுக்கு முன்பு நிறுத்தி விட்டனர்.  இதனால் பசி, பட்டினியுடன் உயிர் வாழ்ந்து வருகிறேன்’’ என்று சோகத்துடன் தெரிவித்தார்.

Related Stories: