தாசில்தார் பிரியாணி விருந்து வைத்த விவகாரத்தில் பாசன உதவியாளர் டிரான்ஸ்பர்: உயரதிகாரிகளை காப்பாற்ற பலிகடா ஆனாரா?

சென்னை: பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தாசில்தார் பிரியாணி விருந்து வைத்த விவகாரத்தில் பாசன உதவியாளரை பணியிட மாற்றம் செய்து இருப்பது பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு பணி சிறப்பாக மேற்கொண்டதற்காக குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா என்பவருக்கு சுதந்திர தினவிழாவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார். இதை கொண்டாடும் விதமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் மட்டன் பிரியாணி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், ஒரே இடத்தில் பலரை அழைத்து ஒரு தாசில்தார் விருந்து வைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தாசில்தார் ஜெயசித்ரா அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக முத்து என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது, பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் இது போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியிருக்க கூடாது. ஆனால், அரசின் விதிமுறைகளை மீறி இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரி பொறுப்பாளர் உதவி பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் இல்லாத சூழலில் கூடுதல் பொறுப்பில் உள்ள செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டன. இந்த விசாரணையில் செம்பரம்பாக்கம் ஏரி பொறுப்பாளர் தான் உயர் அதிகாரிகள் ஒப்புதல் இன்றி விருந்தினர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பாசன உதவியாளர் குமரவேல் என்பவர் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஊழியர்கள் சிலர் கூறும் போது, செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள பொது விருந்தினர் மாளிகைக்கு பொறுப்பாளர் ஒருவர் உள்ளார். அவரின் அனுமதியில்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிபட்ட சூழலில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாசன உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறியாளரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கடைநிலை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது எந்த வகையில் நியாயம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: