சர்வர் பிரச்னையால் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கான அரசு இணையத்தள சர்வர் சரிவர இயங்காததால் சான்றிதழ் பெற முடியாமல்  ஏராளமானோர் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தாலுகா அலுவலகம், தொடக்க வேளாண்  கூட்டுறவு வங்கி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகம், பொது சேவை மையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான இ.சேவை  மையங்கள் உள்ளன. இத்திட்டம் மூலமே பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதவை சான்று,  பத்தொண்ணு உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றுகளை பெறலாம். அரசின் பல்வேறு நிதியுதவி திட்டம், பாஸ்போர்ட் பெற  விண்ணப்பம், எல்ஐசி தவணை செலுத்துதல் உள்ளிட்டவைகளும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் நகராட்சி,  பேரூராட்சி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு பதிவுகளை குறித்து கொடுத்தால் முதலில் அவற்றை பதிவு செய்து பின்னர்  சான்றிதழ் வழங்குகின்றனர். சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூலம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இதற்கான சர்வர்கள் செயல்படும் வகையில் உள்ளது.  ஆனால் அந்த குறிப்பிட்ட நேரமும் சர்வர்கள் செயல்படாமல் முடங்குவதால் சான்றிதழ் பெற முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான நாட்கள் சர்வர்  முடக்கப்பட்டுள்ளது. இதனால் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: எப்போது சென்றாலும் சர்வர் செயல்படவில்லை அதனால் சான்றிதழ் பதிவு செய்யப்படவில்லை என கூறுகின்றனர்.  அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்படும் என கூறுகின்றனர். ஆனால் முன்பைவிட தற்போது தான் அதிக நாட்கள் அலைய வேண்டிய நிலை  உள்ளது. அவசர தேவைகளுக்கு சான்றிதழ் பெற முடியாத இக்கட்டான நிலை ஏற்படுகிறது. அனைத்து சான்றிதழ் பெற நடைமுறையில் உள்ள  சர்வர்களையும் சரிவர செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: