கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள குவாரி டெண்டர் ரத்து!: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்..!!

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய குவாரி டெண்டர் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கருங்கல், ஜல்லி உள்ளிட்ட 18 குவாரிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் 6ம் தேதி வெளியிட்டதாகவும், அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பங்கள் கிடைக்க கடந்த 5ம் தேதி இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெண்டர் ஒப்பந்தங்கள் 6ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்படும், கலந்துக் கொள்ள நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், தற்போது மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஓபன் டெண்டர் நடவடிக்கைகள் ஒரு சிலருக்கு ஆதாயம் அமையும் வகையில் உள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த 18 குவாரிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளில் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்று பயனடையும் வகையில் உள்ளது.

இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே இந்த ஓபன் டெண்டர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 100 கோடி ரூபாய் மதிப்புடைய டெண்டரை ரத்து செய்துள்ளதாகவும், வரக்கூடிய நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

Related Stories: