மாநில அரசு அனுமதியளித்தால் தமிழகத்தில் பயணிகள் ரயில் இயக்க தயார்: தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பேட்டி

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் சண்முகராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்த பின்பு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விழுப்புரம் பகுதியில் ரயில்களை அதிவேகமாக இயக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என கூறினார். தற்போது மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். தேஜஸ் போன்ற இடைநில்லா அதிவேக ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்கிறது என கூறினார். எனவே விழுப்புரத்தில் நிற்பதில்லை எனவும், விழுப்புரம் வழியாக செல்லும்போது சற்று சீரான வேகத்தில் குறைத்து இயக்கப்படக்கூடிய சூழல் உள்ளது என பேட்டியளித்தார்.

அதன் வேகத்தை அதிகரிப்பது குறித்து மிக அதிகமான வளைவு பகுதியில் சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என எடுத்துரைத்தார். இதன் மூலம் வளைவுப்பகுதியில் விரைவாக ரயில்கள் இயங்கும் என கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ரயில்கள் இயக்கப்படவில்லை என தெரிவித்தார். கேரளா மாநிலத்தில் அம்மாநில அரசு அனுமதி அளித்ததையடுத்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பயணிகள் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே தயாராக உள்ளது எனவும், மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என கூறினார். அனுமதி கிடைத்ததும் கட்டாயமாக ரயில்கள் இயக்கப்படும் என கூறினார்.

Related Stories: