பரமக்குடியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் திருட்டு : வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ராமநாதபுரம்:  பரமக்குடி அருகே மஞ்சூர் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் திருடுபோயுள்ளதால், வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் என்ற கிராமத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த பகுதி மிகுந்த விவசாயம் நிறைந்த கிராமம் என்பதால் ஏராளமான விவசாயிகள், தங்களது நகைகளை அதிகளவில் அடமானம் வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த வங்கியில் சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு மேல் நகைகளை அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக மணிகண்டன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மீது கடந்த மாதம் ஒரு குற்றச்சாட்டானது எழுந்துள்ளது. அதாவது, அடகு வைக்கப்பட்ட தன்னுடைய நகைகள் திருடுபோயுள்ளதாக ஒரு வாடிக்கையாளர், மணிகண்டன் மீது புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணை நடத்தப்பட்டத்தில் நகை திருடு போனது உண்மை என்பதும், அதற்கு மணிகண்டன்தான் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர், வங்கி நிர்வாகம் மணிகண்டனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 3 நாட்களாக நகைகள் திருடுபோயுள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனால், தங்களிடம் அடமானம் வைக்கப்பட்ட 97 நபர்களின் நகைகளில் ஒரு சில நகைகள் திருடுபோயுள்ளதாகவும், இதுதொடர்பாக மணிகண்டன் என்பவரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நகைகளை விரைவில் மீட்டு தருவதாகவும் வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், கனரா வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Related Stories: