சாத்தான்குளம் சம்பவத்துக்கு குரல் எழுப்பிய அரசியல் கட்சிகள் தூத்துக்குடி போலீஸ்காரர் இறப்புக்கு ஏன் வாய் திறக்கவில்லை? உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகனுக்காக கண்டன குரல் கொடுத்து, நிதியுதவிகளை அளித்த அரசியல் கட்சிகள், ஏன் ரவுடியை பிடிக்க சென்று வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் மறைவுக்கு மட்டும் வாய் திறக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையே நடைபெற்ற மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வேலு உள்ளிட்ட பலரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து அவர்கள் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி கும்பல்களை ஒடுக்க, மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் உள்ளது போல ரவுடிகளை கட்டுப்படுத்த தனிச்சட்டம் இயற்றினால் என்ன என்று கடந்த 2018ம் ஆண்டு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அப்போதைய டிஜிபி அந்த மாநிலங்களை போல தீவிரவாதிகளோ, சட்டவிரோத கும்பலோ இல்லை என்று பதில் அளித்திருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, குற்றவியல் சட்டத்தை மறுசீரமைப்பு செய்து எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் ஒரு குழுவை அமைத்து உள்ளதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முன்னாள் டிஜிபி தாக்கல் செய்த பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என்று கூறினர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது: தமிழகத்தில் காவல்துறை, அரசியல் கட்சிகள், எம்.பி, எம்.எல்.ஏ.கள், உள்ளிட்டோருடன் சில ரவுடிகள் கூட்டணி வைத்துள்ளனர். அரசியல்வாதிகள், ரவுடிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருகிறது.

மேலும் தொடர்ச்சியாக தமிழகத்தில் போலீசார் தாக்கப்படும் சூழல் அதிகரித்து வருகிறது. இது நீடித்தால் மாநில சட்டஒழுங்கு சரியில்லை என்று தான் நினைக்கத் தோன்றும். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை பிடிக்கச் சென்ற போது, காவலர் சுப்பிரமணியன் வெடி குண்டு வீசப்பட்டு உயிரிழந்தார். மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால் இந்த சமுதாயத்துக்காக உயிர் நீத்த போலீசார் சுப்பிரமணியனுக்காக அரசியல் கட்சிகள் வாய் திறக்கவில்லை. ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை, சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டன குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கது, நிதியுதவி வழங்கியதும் பாராட்டுக்குரியது தான். ஆனால் அங்கு வரிசையாக சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கியவர்கள், ஏன் போலீஸ்காரர் சுப்பிரமணியன் மறைவு குறித்து வாய் திறக்கவே இல்லை.

ஒரு போலீஸ்காரரின் உயிர் மட்டும், உயிராக தெரியவில்லையா? அந்த போலீஸ்காரரின் முகத்தை கூட அவரது 6 மாத கைக்குழந்தை சரியாக பார்க்கவில்லை. சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் என்பதற்காக  இளம் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தவிக்கவிட்டு போலீஸ்காரர் சுப்ரமணியன் மறைந்துள்ளார். அவரது இறுதி சடங்கில், தமிழக டிஜிபி போலீஸ் உயர் அதிகாரிகள், உள்ளூர் எம்.எல்.ஏ. மட்டும் தான் சென்றுள்ளனர். உள்ளூர் அமைச்சர், எம்.பி உள்ளிட்டோர் எங்கு போனார்கள்.

போலீஸ்காரர் சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு தமிழக முதல் அமைச்சர் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார். அரசு எந்திரத்தை தாண்டி மற்ற அரசியல் கட்சிகளும் இது போன்ற சம்பவங்களில் பலியானோரின் குடும்பத்திற்கு முன் நின்று உதவினால் தான், போலீஸ்காரர்கள் நம்பிக்கையோடும், துணிவோடும், உத்வேகத்தோடும் வேலை செய்வார்கள். ரவுடிகள் இறந்தால் காட்டும் அக்கறையை மனித உரிமை அமைப்புகள், போலீஸ்காரர் சாகும் போது மட்டும் ஏன் அக்கறை காட்டுவது இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கடும் கண்டன கருத்தை தெரிவித்தனர்.

பின்னர் மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் உள்ளது போல, ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். போலீஸ்காரரின் இறுதி சடங்கில் தமிழக டிஜிபி போலீஸ் உயர் அதிகாரிகள், உள்ளூர் எம்.எல்.ஏ. மட்டும் தான் சென்றுள்ளனர். உள்ளூர் அமைச்சர், எம்.பி உள்ளிட்டோர் எங்கு போனார்கள். ரவுடிகள் இறந்தால் காட்டும் அக்கறையை மனித உரிமை அமைப்புகள், போலீஸ்காரர் சாகும்போது மட்டும் ஏன்  காட்டுவது இல்லை.

Related Stories: