மணப்பாறை அருகே அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் குளம், 300 அடி வாரி ஆக்கிரமிப்பு: போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

மணப்பாறை: மணப்பாறை அருகே அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் குளம் மற்றும் வாரி ஆக்கிரமிப்பு போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. மணப்பாறை அருகே மொண்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட போடுவார்பட்டியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரெட்டிமடை குளம் மற்றும் சுமார் 1 ஏக்கரில் 300 அடி நீள வாரியையும் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வைத்தது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குளத்தையும், வாரியையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டு தரக்கோரி வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் அப்பகுதியில் சர்வே செய்து குளம் மற்றும் வாரியை ஊராட்சி நிர்வாகத்தினர் மீட்டனர். இந்நிலையில் மூடப்பட்ட குளம் மற்றும் பூங்குடிபட்டி குளத்திற்கு செல்லும் வாரி ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி நடந்தது. இதில் தாசில்தார் தமிழ்க்கனி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாபு, அண்ணாதுரை, ரேவதி, ஊராட்சி தலைவர் கலைச்செல்வி நாகராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குளம் மற்றும் வாரியை தூர்வாரி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர்.

Related Stories: