கொரோனா ஊரடங்கில் புற்றுநோய் சிகிச்சைக்காக 120 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்து சென்ற பாசக்கார முதியவரின் மனைவி மரணம்: கும்பகோணத்தில் சோகம்

கும்பகோணம்: கொரோனா ஊரடங்கு நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்ட மனைவியை சைக்கிளில் கும்பகோணத்திலிருந்து 120 கி.மீட்டர் தூரம் புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பாசக்கார முதியவரின் மனைவி நேற்று உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (60). கூலித்தொழிலாளி. முதல் மனைவி இறந்ததால் 2வதாக மஞ்சுளா(39) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய நிலையில் விஷ்ணு(12) என்ற மகன் உள்ளான். மஞ்சுளாவுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் இடது கன்னத்தில் புற்றுநோய் வந்தது. தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த போது மஞ்சுளாவுக்கு உடல்நிலை மோசமானது. வாகனங்கள் எதுவும் இயக்கப்படாததால் பாசக்கார கணவர் அறிவழகன், தனது சைக்கிளில் மனைவியை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு மார்ச் 29ம் தேதி சேத்தியாதோப்பு வழியாக 120 கி.மீட்டர் தூரம் கடந்து புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபின் ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்தது.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதால் அறிவழகன் செயலை பாராட்டி அவருக்கு பலரும் பணம் மற்றும் பொருளுதவி செய்தனர். தொடர்ந்து வீட்டிலிருந்து மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்த மஞ்சுளா நேற்று அதிகாலை உயிரிழந்தார். அப்போது அவரது கணவர் அறிவழகன், இவ்வளவு தூரம் உன்னை சைக்கிளில் அழைத்து சென்றும் காப்பாற்ற முடியவில்லையே என கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிவழகன் கூறுகையில், ‘ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாமல் போனதால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டேன். பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது வலியால் துடித்தவரை எனது சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தேன். ஆனால், 92 நாட்களாக அவருக்கு நான் மருந்து, மாத்திரைகளை வாங்கி செலவு செய்தும், கடன் வாங்கியும் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Stories: