உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை அசாம் மாநில முதல்வர் வேட்பாளராக களமிறக்க பா.ஜ.க திட்டம்!

டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகோயை அசாம் மாநில முதல்வர் வேட்பாளராக களமிறக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவரான தருண் கோகோய் கூறியுள்ளார். அயோத்தி வழக்கு, ரஃபேல் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய ரஞ்சன் கோகோய், கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அடுத்த சில மாதங்களில் அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வானார். இந்த நிலையில், ரஞ்சன் கோகோயை அசாம் முதல்வர் வேட்பாளராக களமிறக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பதாக தருண் கோகோய் கூறியிருக்கிறார்.

அரசியல் ஆசையால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், முதல்வர் வேட்பாளராகவும் சம்மதம் தெரிவிப்பார் என்று தருண் கோகோய் விமர்சித்துள்ளார். அசாமில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிய தலைவர்கள் இல்லாததால் ரஞ்சன் கோகோயை களமிறக்குகிறது என்பதும் தருண் கோகோய்யின் கருத்தாகும். இதுகுறித்து தருண் கோகாய் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, அசாமில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கான பா.ஜ.க-வின் வேட்பாளர்கள் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அசாமில் பா.ஜ.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் இருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதே வேளையில் தருண் கோகோய்யின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று பாரதிய ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: