விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்: பக்தர்களின்றி நடந்தது

திருப்புத்தூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் பக்தர்களின்றி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை தினந்தோறும் சுவாமி காலையில் வெள்ளி கேடகமும், இரவில் மூஷிக, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினார். 6ம் நாள் விநாயக பெருமான் அசுரனை வதம் செய்யும் கஜமுகா சூரசம்ஹாரம் நடந்தது. 9ம் நாள் தேரோட்டம் கொரோனா பாதிப்பால் நடைபெறவில்லை.

10ம் நாளான நேற்று மூலவர் கற்பக விநாயகர், தங்கக்கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து காலை 10 மணியளவில் உற்சவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் கோயில் குளத்தின் முன்பு எழுந்தருளினார். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க குளப்படிக்கட்டில் அங்குசதேவருக்கு 16 வித திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார் ஒருவர் அங்குசதேவருடன் கோயில் குளத்தில் 3 முறை மூழ்கி எழுந்து விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

பின்னர் மதியம் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது. பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளால் கொடியேற்றம் முதல் நடந்த தீர்த்தவாரி உற்சவம் வரை அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தர்களின்றி நடந்தன.

முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமியை தொடர்ந்து, அனைவரது கவனத்திற்குரியதாக இங்குள்ள முக்குறுணி விநாயகர் காட்சியளிக்கிறார். மீனாட்சி கோயிலுக்குள் தெற்கு நோக்கிய திருவுருவில், 8 அடி உயரத்தில், நான்கு கரங்களுடன் அமர்ந்தநிலையில் தரிசனம் தரும் இந்த விநாயகர் சிலை, திருமலை மன்னர் அரண்மனை கட்ட மண்ணைத் தோண்டியபோது கிடைத்ததாகும். இந்த மண் தோண்டப்பட்ட இடமே இன்றைக்கு மதுரையின் அழகு அடையாளப் பெருமைக்குரிய வண்டியூர் தெப்பக்குளமாக மாற்றப்பட்டுள்ளது. மண்ணுக்குள் புதைந்து மீட்ட இந்த விநாயகரே, மதுரை மீனாட்சி கோயிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதி செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி நாளிலும், இந்த முக்குறுணி விநாயகருக்கு வெள்ளியால் ஆன கவசம் அணிவித்து, உச்சிகால பூஜையின்போது மெகா சைஸ் கொழுக்கட்டை படைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். குறுணி என்றால் 6 படி. முக்குறுணி என்றால் 18 படியாகும். இவ்வகையில், 18 படியில் மாவில் கொழுக்கட்டை செய்து படைப்பதால், இவ்விநாயகர் ‘முக்குறுணி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நேற்று வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து 18 படியால் ஆன மெகா சைஸ் கொழுக்கட்டை செய்யப்பட்டு, இந்த பெரிய கொழுக்கட்டையை 4 பேர் மூலம் மூங்கில் கம்பில் சுமந்து வந்து சுவாமிக்கு படைத்தனர். இதனை பிரசாதமாக்கி பலருக்கும் விநியோகிக்கப்பட்டது. காலை 10.45 மணிக்கு தொடங்கிய சிறப்பு பூஜை 11.15 மணி வரை நடந்தது. கோயிலுக்குள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவதற்கு தடை உள்ள நிலையில், இந்த பூஜை நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை, மீனாட்சி கோயில் இணையத்தளங்களிலும், கோயிலின் யூடியூப் அலைவரிசையிலும் நேற்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

Related Stories: