அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி விறுவிறுப்பு

லக்னோ: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. பல ஆண்டுகளாக பல்வேறு சட்டப் போராட்டங்களை சந்தித்த பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்தாண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு 40 கிலோ எடை கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட கற்களை கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு, பூமி பூஜைக்காக கோயில் வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, கோயில் கட்டப்படும் இடத்தை சுத்தம் செய்யும் பணிகளும் வேகமாக நடந்தன. தற்போது, இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்ட நிலையில், கோயில் கட்டும் பணி விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. இக்கோயிலை கட்டும்பணி, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. ராமர் கோயில் கட்டுமானப் பணி, ஏற்கனவே திட்டமிடப்படி அடுத்த மூன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கூறியுள்ளது. இதனால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: