மத்திய, மாநில அரசு நிதி தாமதமாவதால் கீழடி எலும்பு மாதிரி டிஎன்ஏ ஆராய்ச்சி முடிவுகள் தாமதம்: துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி

திருப்பரங்குன்றம்: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரியின் டிஎன்ஏ ஆராய்ச்சிக்கு மத்திய,மாநில அரசுகள் ஒதுக்கிய  நிதி  கொரோனா ஊரடங்கால்  தாமதமாவவதால் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதாக  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகளில் உள்ள டிஎன்ஏ குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு ரூ.3 கோடி மத்திய, மாநில அரசு ஒதுக்கியது. கொரோனா ஊரடங்கால் இந்த நிதி வருவது தாமதமாவதுடன், ஊரடங்கால் ஆராய்ச்சி மாணவர்களின் வருகை இல்லாததால் டிஎன்ஏ ஆராய்ச்சி முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாகவே மத்திய, மாநில அரசு நிதி விடுவிக்கும் பட்சத்தில் டிஎன்ஏ ஆராய்ச்சிக்காண ஆய்வகத்தை தயார் செய்யும் பணிகளை முடுக்கி விட வாய்ப்பாக அமையும். கொரோனா ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறந்தவுடன் ஆராய்ச்சி மாணவர்களால் கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகளில் உள்ள டிஎன்ஏவை ஆராய்ந்து அதனுடைய காலம், அப்பகுதி மக்கள் யார், நாகரீகம் என்ன என்பதை கண்டறிய ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி செய்து உலகப் பாரம்பரியமிக்க தமிழர்களின் வரலாற்றையும் வாழ்க்கை முறைகள் குறித்தும் அறிக்கை வெளியிடுவோம். மேலும் கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகள் உள்ளிட்ட பொருட்களை தற்போது மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உயிரியல் துறை ஆய்வகத்தில் குளிர்சாதன அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் கூறினார்.

Related Stories: