அபாயகரமான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க தடை 360 ஆலைகளுக்கு தடையில்லா சான்று கொடுப்பதில் சிக்கல்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கும் பொதுப்பணித்துறை

சென்னை: அபாயகரமான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 360 ஆலைகளுக்கு தடையில்லா சான்று கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 690 ஆலைகளுக்கு தடையில்லா சான்று கொடுப்பதற்கான நடவடிக்கைளை எடுத்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக, மாநிலத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 1166 பிர்காக்களில் சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பெரம்பூர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம் உட்பட 471 பிர்காக்கள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 638 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி 1684 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதற்கிடையே, கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள் உரிய நிபந்தனையை பின்பற்றி விண்ணப்பித்தால் தடையில்லா சான்று தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உரிமம் பெறாத ஆலைகள், புதிதாக தொடங்கப்பட உள்ள ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்தது. மேலும், இதுதொடர்பாக, ஒவ்வொரு குடிநீர் கேன் உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது.

அதன்பேரில், மாநிலம் முழுவதும் 1050 ஆலைகள் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

 இதில்,  பாதுகாப்பான பகுதிகளில் 690 ஆலைகளும், அதி நுகர்வு மற்றும் அபாயகரமான பகுதிகளில் 360 ஆலைகளும் விண்ணப்பித்துள்ளன. இதில், 690 ஆலைகளுக்கு தடையில்லாத சான்று வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழுவினர் ஆலைகளில் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், அதிநுகர்வு மற்றும் அபாயகரமான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 எனவே, அந்த இடங்களில் நிலத்தடி நீர் எடுக்க விண்ணப்பித்த ஆலைகளுக்கு தடையில்லா சான்று கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 9ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, உயர் நீதிமன்றம் கொடுக்கும் அறிவுரையின் பேரில் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: