சீவலப்பேரி பாண்டி முதல் துரை முத்து வரை வல்லநாட்டு மலையில் ஆயுதப்பயிற்சி பெற்ற ரவுடிகள்

சென்னை: தூத்துக்குடி அருகே போலீஸ்காரர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வல்லநாட்டு மலையில்தான் சீவலப்பேரி பாண்டி முதல் தற்போது பலியான ரவுடி துரைமுத்துவரை ஆயுதப்பயிற்சி பெற்று வந்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வனத்துறை அதிகாரிகளும் உதவியிருக்கும் அதிரடி தகவல்களும் வெளியாகியுள்ளன. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 4 கொலை செய்ததோடு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தவர் ரவுடி துரைமுத்து. வழக்கமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் எப்போதுமே பதற்றமானவை என்பதால் திறமையான போலீசாரை நியமிப்பார்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தண்டனை கொடுக்க வேண்டிய அதிகாரிகளை இந்த மாவட்டங்களுக்கு தூக்கியடித்து வருகின்றனர்.

இல்லாவிட்டால் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கின்றனர். இதனால் அவர்கள் தென் மாவட்டங்களில் வேலை செய்வதில்லை. மாறாக ரவுடிகளுடன் சேர்ந்து, கொள்ளையடிப்பதில் குறியாகிவிடுகின்றனர். இதனால் ரவுடிகளை ஒழிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. கொலைகள் நடந்தாலும் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் தவறான நபர்களை சரண்டர் செய்து, வழக்குகளை நீர்த்துப்ேபாகச் செய்து விடுகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்த ரவுடிகள் தற்போது வெடிகுண்டுகள், துப்பாக்கிகளை கையாளத் தொடங்கிவிட்டனர். துப்பாக்கிகள் வடமாநிலங்களில் இருந்து வாங்கி வந்தாலும், வெடிகுண்டுகளை சொந்த ஊரிலேயே தயாரிக்கின்றனர். தற்போது வெடிகுண்டுகளை தயாரிக்கவும், மறைந்து கொள்வதற்கும் வல்லநாடு மலை பகுதி ரவுடிகளுக்கு வசதியாகிவிடுகிறது. முன்பு போலீசாருக்கு சவாலாக விளங்கிய ரவுடி சீவலப்பேரி பாண்டியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். அப்போது வல்லநாட்டு மலையில்தான் சீவலப்பேரி பாண்டி மறைந்திருந்தார். அதேபோலத்தான் தற்போது ரவுடி துரைமுத்துவும் அதே வல்லநாட்டு மலையில்தான் தங்கியிருந்துள்ளான்.

அவனுடன் தங்கியிருந்து கேரம்போர்டு விளையாடி வந்த வனக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் வருவதை வனக்காவலர்தான் மோப்பம் பிடித்து ரவுடிகளை தப்பிக்க வைத்துள்ளார். போலீசார் விரட்டி பிடிக்க முயன்றபோதுதான் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசியதில், காவலர் சுப்பிரமணியம் கொல்லப்பட்டார். அதே குண்டுக்கு ரவுடி துரைமுத்துவும் பலியானார். இந்த வல்லநாட்டு மலையில் பல ஆண்டுகளாக வெடிகுண்டு பயிற்சியை பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் செய்து வந்துள்ளனர்.  ஆனால் இந்த தகவல்கள் தெரிந்தும் போலீஸ் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. துரைமுத்து, வெடிகுண்டுகளை தயாரித்து அதை வெடிக்கச் செய்து பார்க்கும் வீடியோக்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரவுடிகளுக்கு வனத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். தற்போது வனக்காவலர் மட்டுமே சிக்கியுள்ளார். பல மாதங்களாக அங்கு தங்கியிருந்த துரையை வனத்துறை அதிகாரிகள் குறிப்பாக ரேஞ்சர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்தும், அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் மான்கள், மயில்களை ரவுடிகள் வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதை வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். வல்லநாடு மலைதான் ரவுடிகளின் ஆயுத தொழிற்சாலையாகவும், பயிற்சி மையமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

தற்போது போலீஸ்காரர் பலியானது மூலம்  இந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால் இந்த வழக்குகளில் வனத்துறை உயர் அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. அதேநேரத்தில் குற்றவாளிகளுடன் சிறைத்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சிறைக்குள் சென்றவுடன் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணம் மற்றும் சாதி ரீதியாக உதவிகளை செய்கின்றனர். இதனால் குற்றவாளிகள் சிறைக்குள் சென்றாலும் சொகுசாக வாழ்க்கை வாழ்கின்றனர். வெளியில் வந்தவுடன் மீண்டும் குற்றங்களை செய்கின்றனர்.

இதனால் இதுபோன்ற வழக்குகள் வரும்போது குற்றவாளிகளுக்கு உதவி செய்யும் சிறைத்துறை அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குற்றவாளிகளின் செல்போனில் பேசும் அதிகாரிகளை கண்காணித்தாலோ பாதி குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், குற்றங்கள் நடப்பதற்கு முன்னறே நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் என்கின்றனர் நேர்மையான அதிகாரிகள்.

Related Stories: