திருச்செங்கோடு அருகே பரிதாபம்: கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை

* மகள், மகனுக்கும் விஷம் கொடுத்தனர்

* உருக்கமான கடிதம் சிக்கியது

திருச்செங்கோடு: கந்துவட்டி கொடுமையால் மகள், மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு மனைவியுடன் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்செங்கோட்டை அடுத்த கைலாசம்பாளையம் கரிச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் விசைதறித்தொழிலாளி சுப்பிரமணி (40). இவரது மனைவி மேனகா (38). இவர்களுக்கு பூஜா(14), நவீன்(12) என்ற குழந்தைகள் உள்ளனர்.  சுப்பிரமணி பல இடங்களில் சுமார் ₹3 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  ஊரடங்கு காலம் என்பதால் சுப்பிரமணிக்கு சரிவர வேலை இல்லை. இதனால் கணவன், மனைவி இருவரும்  கடனை கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனால் கடன் கொடுத்த அய்யாசாமி, வைரவேல் ஆகிய இருவரும் தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி, கடனைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால், குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்தனர். ேநற்று முன்தினம் இரவு தனது இரண்டு குழந்தைகளுக்கும், அரளி விதையை அரைத்து கொடுத்து, தாங்களும் சாப்பிட்டுள்ளனர். இவர்களது குழந்தைகள் இருவரும் வாந்தி எடுத்து, வீட்டின் ஹாலில் படுத்துக் கொண்டனர்.

மயக்க நிலையில் இருந்த குழந்தைகள் இருவரும் நேற்று காலை எழுந்து பார்த்தபோது, தாய், தந்தை இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த, திருச்செங்கோடு நகர போலீசார் பூஜா, நவீன் ஆகிய இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  கந்து வட்டி கேட்டு மிரட்டிய  கோபி, அய்யாசாமி, வைரவேல் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை  போலீசார் தேடி வருகின்றனர்.

அடிக்கடி போனில் அழைத்து தொல்லை... -மேனகா எழுதிய மரண வாக்குமூலம்

தற்கொலைக்கு முன்பு மேனகா நோட்டு தாளில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், உருக்கமாக எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு கடன் பிரச்னை உள்ளது. நாங்கள் ஆட்டையாம்பட்டியில் கடன் வாங்கினோம். எங்களால் கடனை கொடுக்க முடியவில்லை. என்னை படுக்க அழைக்கிறார்கள். போனில் அடிக்கடி அழைத்து தொல்லை கொடுக்கிறான். ஆட்டையாம்பட்டியை சேர்ந்த கோபி என்பவர் அய்யாசாமி, வைரவேலிடம் பணம் வாங்கி கொடுத்தார். தற்போது வேலை எதுவும் இல்லை என தெரிந்தும் அவர்கள் எங்களை தொல்லை செய்கின்றனர். எங்களிடம் தவறாக பேசி மிரட்டுகின்றனர். அதை எங்களால் தாங்க முடியவில்லை. அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி எங்களுக்கு தெரிய வில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: