மாநில அரசிடமிருந்து தன்னாட்சியை பறிக்கும் செயல்: விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு.!!!

சென்னை: இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல விமான நிலையங்கள் தொடர்ந்து தனியாரிடம் வழங்கப்படும் என்றும் அடுத்த 10 வருடத்தில் புதிதாக 100 விமான நிலையங்கள் நாட்டில் கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளிட்ட 12 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க இந்திய விமான நிலைய நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்திடம் ஐம்பது வருடங்களுக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவிற்கு திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறுகையில், விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது, விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும், இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் எதிர்ப்பு:

முன்னதாக, மத்திய அரசின் முடிவை முடிவை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை மறுபரிசீலனை செய்யுமாறும் அதில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசு முன்வைத்த வாதங்களுக்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக எடுத்துள்ள முடிவைப் பார்க்கும்போது நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது கடினமாக இருக்கும். இது எங்கள் விருப்பத்திற்கு எதிராக எடுத்துள்ள முடிவு. இதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: