தங்கம் விலையில் திடீர் சரிவு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1008 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1008 குறைந்தது.

தங்கம் விலை கடந்த 8ம் தேதி முதல் குறைந்து வந்தது. 18ம் தேதி மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.896 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,496க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. கிராம் ரூ.5,166க்கும், சவரன் ரூ.41,328க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அதாவது கிராமுக்கு ரூ.126 குறைந்து ஒரு கிராம் ரூ.5,040க்கும், சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ஒரு சவரன் ரூ.40,320க்கும் விற்கப்பட்டது.

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1008 அளவுக்கு குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சவரன் ரூ.40 ஆயிரத்துக்குள் வந்துள்ளது நகை வாங்குவோருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவணி மாதத்தில் அதிக அளவில் திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது விசேஷங்களுக்கு நகை வாங்குபவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

இகுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:

உலக அரசியல் சூழ்நிலை ஒரு பக்கம். பங்கு சந்தைகள் ஏற்றம், இறக்கம் நிலை, முதலீட்டாளர்கள் மனமாற்றம் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு தங்கம் விலை ஒரு நிலையான இடத்தில் இருக்காது. அதாவது ஏற்றம், இறக்க நிலை தான் காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: