நடிகர் சுஷாந்த் மர்மச்சாவு வழக்கு சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

*மும்பை போலீஸ் மீதான சந்தேகத்தால் முடிவு

புதுடெல்லி : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது  கொலையாக இருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டது.  மேலும், அவரது சாவுக்கு பாலிவுட்டில் நிலவும் சினிமா வாரிசு ஆதிக்கம், அவரது காதலி ரியா சக்கரவர்த்தியின் செயல்பாடு ஆகியவை காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து,  சிபிஐ விசாரணைக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரை செய்தார். ஆனால், மகாராஷ்டிரா அரசு அதற்கு தடையாக இருந்தது.

 மும்பைக்கு விசாரணை நடத்த வந்த பீகார் போலீஸ் அதிகாரிகளையும் சிறை பிடித்தது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் பீகார் அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பை ஒத்திவைத்தது.    இந் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எச்.ராய் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘‘நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான் வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதுதொடர்பாக அனைத்து சட்ட உதவிகளையும் மகாராஷ்டிரா மாநில அரசு செய்துக் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும்,’’ என நீதிபதி, உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச  நீதிமன்ற நீதிபதி ராய், விசாரணைக்காக வந்த பீகார் போலீசாரை மும்பை  போலீசார் சிறை பிடித்ததையும், விசாரணையை முடக்க முயற்சித்ததையும்  கண்டித்தார். அவர்களின் இந்த செயல், சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்  தெரிவித்தார்.

தலைவர்கள் வரவேற்பு

சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதன் மூலம், சுஷாந்த் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: