யூகோ, ஐடிபிஐ உட்பட 4 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை மார்ச்சுக்குள் விற்க மத்திய அரசு இலக்கு: நிதி திரட்ட தீவிரம்

புதுடெல்லி: யூகோ வங்கி, ஐடிபிஐ உள்பட, 4 பொதுத்துறை வங்கி பங்குகளை நடப்பு நிதியாண்டுக்குள் விற்று முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் குறைந்துள்ளது. எனவே, நிதியை திரட்ட அரசுகள் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றன. தற்சார்பு திட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவது, அரசு பங்குகளை விற்பது உள்ளிட்ட முடிவுகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்கிடையில், பொதுத்துறை வங்கியில் உள்ள அரசு பங்குகளை குறைக்க ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் உள்ளன. முதல்கட்டமாக பங்கு எண்ணிக்கையை 51 சதவீதமாக குறைக்கலாம். பங்கு விற்பனையை 12 முதல் 18 மாதங்களுக்குள் முடிக்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் மேற்கண்ட வங்கிகளின் மூலம் ரூ.43,229 கோடியை மத்திய அரசு ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ரூ.25,000 கோடிக்கு மேல் திரட்ட இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், 4 பொதுத்துறை வங்கி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

மத்திய அரசின் நிதி நிலை மோசமாக உள்ளதால், வருவாயை உயர்த்த பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில், வங்கி பங்குகளை விற்பது தொடர்பாக, நிதியமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தது. இதுதொடர்பாக நிதியமைச்சக அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். முதல் கட்டமாக 4 யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஐடிபிஐ, பஞ்சாப் சிந்த் வங்கி ஆகியவற்றில் உள்ள அரசு பங்குகளை நடப்பு நிதியாண்டுக்குள், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விற்று விட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார். வங்கி பங்குகளை நடப்பு நிதியாண்டுக்குள் விற்பது தொடர்பான மத்திய அரசின் முடிவால், இந்த வங்கிகளின் பங்குகள் நேற்று ஏற்றம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: