இ-பாஸ் தளர்வு எதிரொலி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு

சென்னை: கொரோனா் ஊரடங்கால் சென்னை விமான நிலையத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து மே 24ம் தேதி வரை உள்நாட்டு விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மே 25ம் தேதியில் இருந்து குறைந்தளவு உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டன. சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் 25, வரும் விமானங்கள் 25 என இருந்தது. இவைகளில் 3 ஆயிரம் பயணிகளே பயணம் செய்தனர். படிப்படியாக அதிகரித்து, 60 விமானங்களில் 6 ஆயிரம் பயணிகளாக உயர்ந்தது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் பயணிகள் எண்ணிக்கை 7,500ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் 38 விமானங்களில் 4,500 பேர் முன்பதிவு செய்தனர். அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் 39 விமானங்களில் 3 ஆயிரம் பேர் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். இரண்டரை மாதங்களில் நேற்றுதான் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினத்தில் இருந்து அதிக பயணிகள் சென்னை வருகின்றனர்.

அதேநேரத்தில் சென்னையில் இருந்து செல்லும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பாக கடப்பாவுக்கு 8, திருச்சிக்கு 22, மும்பைக்கு 54 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் வருகை அதிகரிப்புக்கு, தமிழகத்தில் நேற்று முதல் இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அதிகரித்துள்ளதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த சில தினங்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories: