கட்டிடம், மனைப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்களுக்கு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் அறிவுரை

சென்னை: கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் அறிவுரை வழங்கினார். சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும கூட்டரங்கில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நகர் ஊரமைப்பு துறையின் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில், கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு சம்பந்தமான விண்ணப்பங்களை, காலதாமதமின்றி விரைந்து அனுமதி வழங்குவதற்கு உரிய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்றும், விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து விடுபட்ட விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் தேவை ஏற்பட்டால் மட்டும் மின்னஞ்சல் மூலமாக மனுதாரருக்கு தெரிவித்து தகவல்களை பெற்றுக் கொண்டும், தேவைப்படின் மனுதாரருடன் நேரில் கலந்தாய்வு செய்வதற்கு ஒரு வாய்ப்பளித்து விடுபட்ட விவரங்களை விரைந்து பெற்று உரிய கால கெடுவிற்குள் தீர்வு செய்யப்பட வேண்டுமென்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார். மேலும், நகர் ஊரமைப்பு துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட 15 மாவட்ட அலுவலக பணிகளை எவ்வித தொய்வுமின்றி துரிதமாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அரசு முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, நகர் ஊரமைப்புத் துறையின் இயக்குநர் பா.முருகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: