சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய தொழிலாளர்கள் திடீர் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் 420 தொழிலாளர்கள் திடீர் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சென்னைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக கடந்த 1970ம் ஆண்டில் எண்ணூர் அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் அது நிரந்தரமாக மூடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் படிப்படியாக நிரந்தர தொழிலாளர்கள் அகற்றி கான்ட்ரக்ட் தொழிலாளர்கள் மூலம் பணி செய்து வந்தார்கள். இதனையடுத்து பணியில் இருந்த 600 பேரில் 470 பேர் அருகில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு தற்காலிக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் கூட தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்காக பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் 420 பேரை மின்பகிர்மான வடக்கு வட்டத்திற்கு நிரந்தரமாக பணிமாற்றம் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத இந்த சூழலில், திருவள்ளூர் மாவட்டங்களில் பணி புரிந்து வரும் ஊழியர்கள் எவ்வாறு மாற்று பணியிடத்திற்கு செல்வார்கள் என்று கேள்வி எழுப்பி கோஷமிட்டனர். மேலும், பணி மாற்ற உத்தரவை திரும்பப்பெற கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: