சென்னை விமான நிலையத்தில் வாலிபர் அத்துமீறி நுழைந்த விவகாரம் சிஐஎஸ்எப் அதிகாரிகள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியின் எண் ஒன்று கேட் வழியாக நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்து, அங்கு சுற்றிக்கொண்டு இருந்தார். பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அதிகாரிகள், உடனடியாக விரைந்து வந்து அவரை துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது  பல்லாவரத்தை சேர்ந்த முரளிராஜ் (28) என்பது தெரிந்தது அதிகாரிகள் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பிவிட்டனர். இதற்கிடையே வாலிபர் எந்தவித சோதனைகளும் இல்லாமல் விமானநிலையத்திற்குள் வந்தது எப்படி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. இச்சம்பவம் விமானநிலைய பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றியுள்ளதால் உயர்அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரி, சென்னை உள்நாட்டு முனையம் வந்து விசாரணை நடத்தினார். மேலும், ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளையும் ஆய்வு செய்தார். அதில், முரளிராஜ் கேட்டில் காவல் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏஎஸ்ஐக்கு தெரிந்தே உள்ளே நுழைந்து சுற்றியது, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் எஸ்ஐ ஒருவர் வந்து முரளிராஜை பிடித்து விசாரித்துவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் அவரே விடுவித்தது பதிவாகியிருந்தது. இதன் காரணமாக காவல் பணியில் அலட்சியம், பாதுகாப்பு விதிகளை மீறி உள்ளே நுழைந்தவரிடம் முழுமையான விசாரணையின்றி விடுவித்ததற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 2 பேரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.அதோடு அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: