ஓய்வு அறிவித்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி!: சமூக வலைத்தளங்களில் சச்சின், விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு..!!

டெல்லி: சர்வேதச கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருப்பது ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களையும் வருத்தமடைய செய்துள்ளது. பலர் அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர். தோனியின் ஓய்வு குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டுக்கு தோனி அளித்த பங்களிப்பு மிகப்பெரியது என குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்வில் சிறந்த தருணமாக அவருடன் விளையாடி 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதையே கருதுவதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

இதேபோல முன்னாள் இந்திய கேப்டனும் பி.சி.சி.ஐ. தலைவருமான கங்குலி, தோனியின் ஓய்வு ஒரு சகாப்தத்தின் முடிவு என்று புகழ்ந்துள்ளார். தோனியின் தலைமை பண்புகள் யாருக்கும் வராது, ஒருநாள் போட்டியில் அவர் ஆரம்பகாலத்தில் வெளிப்படுத்திய பேட்டிங் திறமைகள் உலகையே திரும்பி பார்க்க வைத்தவை என்று கங்குலி பாராட்டியுள்ளார். விக்கெட் கீப்பர்களுக்கு ஒரு தரத்தை நிர்ணயித்தவரும் தோனி என்பதும் கங்குலியின் புகழாரம். மனதிற்கு நெருக்கமானவர்கள் ஓய்வு முடிவை அறிவிப்பது நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார். நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் மக்களின் நினைவுகளை விட்டு நீங்காது. சக வீரராக தோனி கொடுத்த மரியாதை அரவணைப்பிற்கு தலைவணங்குகிறேன் என்று கோலி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தோனி ரசிகர்களின் குடும்பங்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் என்று சேவாக் தெரிவித்துள்ளார். தனது ஸ்டைலிலேயே தோனி ஓய்வு பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் கூறியுள்ளார். இந்தியா கண்ட சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர், அவருடன் நேரத்தை செலவிட்டது மிகவும் பெருமையாக உள்ளது என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். இதேபோல் தோனியின் ஓய்வுக்கு பலரும் பாராட்டு, வாழ்த்து மற்றும் வருத்தங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

Related Stories: