விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தில் மோசடி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தில் நடந்த மோசடி குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதம மந்திரியின் சிறு-  குறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ஆறாயிரம் நிதி வழங்கும் திட்டத்தில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது.  ஒரு சில மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இத்தகைய முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

இந்த மோசடியில், வேளாண்மை துறை அதிகாரிகள், இணைய மையங்களை நடத்துபவர்கள் இவர்களுக்கிடையில் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள்  என பலநூறு பேர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சிறு- குறு விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய அரசின் நிதி உதவியை  இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற நபர்கள் பெயரை பட்டியலில் சேர்த்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து பலனடைந்திருக்கிறார்கள்.   மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற எங்களை அணுகுங்கள் என்று பி.ஜே.பி கட்சியை சார்ந்த பலர் பகிரங்கமாக விளம்பரம் செய்தனர்.  அவர்களுக்கும் இந்த மோசடிக்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.  

பல மாவட்டங்களிலும் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாலும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும், மோசடி பேர் வழிகளும் இதில்  சம்பந்தப்பட்டிருப்பதாலும் இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து  பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: