கீழடி அகழாய்வில் கூரை ஓடுகள் கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் சரிந்த நிலையில் கூரை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்  அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது உலைகலனின் தொடர்ச்சியை கண்டறிய 4 குழிகள் தோண்டப்பட்டு  ஆய்வு நடந்து வருகின்றன. நேற்று நடந்த அகழாய்வில் 4 அடி ஆழத்தில் சரிந்த நிலையில் கூரை ஓடுகள் தென்பட்டன. 4 குழிகளிலும் ஒரே  ஆழத்தில் கூரை ஓடுகளும் அதன் அருகிலேயே தூண் அமைக்கப்பட்டதற்கு ஆதாரமாக துளைகளும் தென்பட்டன. தொல்லியல் துறையினர்  கூறுகையில், ‘‘உலைகலனின் மேற்பகுதி கூரையால் அமைக்கப்பட்டிருக்கலாம். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்தவித வசதியும் இல்லாத  காலத்தில் சுட்ட 30 அடி நீள அகலத்தில் கூரைகள் அமைத்துள்ளனர்.

ஏற்கனவே 4ம் கட்ட அகழாய்வில் சரிந்த நிலையில் கூரை ஓடுகளும் மழைநீர் வடிய தனிப்பாதைகளும் கண்டறியப்பட்டன. தற்போதைய 6ம் கட்ட  அகழாய்வில் அதற்கு ஆதாரமாக பெரிய அளவிலான கூரை ஓடுகள் கிடைத்துள்ளன. கூரை ஓடுகளின் மேற்புறம் வழுவழுப்பான அமைப்பில் உள்ளது.  மழைக் காலங்களில் கூரை மீது விழும் தண்ணீர் எளிதாக வடிய இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். சிறிய வகை உலைகலனில் இருந்து  வாய்க்கால் போன்ற அமைப்பும் வெளிப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

இதனிடையே கொந்தகையில் 5 முதுமக்கள் தாழிகளில் இருந்து எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் ஒரு முதுமக்கள்  தாழியில் இருந்து எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டன. அகரத்தில் ஐந்து அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டிருந்த நிலையில் மேலும்  மூன்று அடுக்குகளும் கண்டறியப்பட்டன.

Related Stories: