சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறாது!: கொரோனா பரவலை காரணம் காட்டி மீண்டும் ஒத்திவைப்பு..!!

சென்னை: சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாது என்பதால் சுதந்திர தினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம், உழைப்பாளர்கள் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள் பயனாளிகள் தேர்வு செய்து ஒப்புதல் பெறப்படும். இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊரடங்கால் ஊராட்சிகள், ஒன்றியங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

அதன்படி கடந்த மே மாதம் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து, இம்மாத 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் இக்கூட்டத்ததையும் கொரோனா பரவல் காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அடுத்த கிராம சபை கூட்டம் எப்போது நடக்கும் என்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் சுதந்திர தினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: