பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல் பாஜகவிடம் அதிமுக அரசு சிக்கி இருக்கிறது : முத்தரசன் பேட்டி!!

சேலம் : பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.சேலத்தில் இன்று அளித்த பேட்டியில் அளித்த அவர், அதிமுகவை போல பிற கட்சிகளை பலவீனப்படுத்தும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்றார்.மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜக கால்ஊன்ற சாதி, மத கலவரங்களை ஏற்படுத்துகிறது. கேடி, ரவுடிகளை கட்சியில் சேர்த்து வருகிறது. இதர கட்சிகளை பலமிழக்க செய்யும் முயற்சியிலும் பாஜக ஈடுபடுகிறது. பாஜ என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது. தலை மட்டும் தான் லேசாக வெளியே தெரிகிறது. அதனால் இனி பாம்பின் வாயில் இருந்து மீள முடியாது.திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணி கொள்கை ரீதியானது. எங்கள் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2 ஆண்டுக்கு முன்பே அறிவித்து விட்டோம்.

எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காகவும், தமிழகத்தின் உரிமைக்காகவும் தொடர்ந்து 2ஆண்டாக ஒன்றிணைந்து போராடுகிறோம். அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோம், வரும் சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். திமுகவுக்கு பாஜ போட்டி என்பதும், அவர்கள் தலைமையிலான கூட்டணி என்பதும் பகல் கனவு. பாஜவுடன் உள்ள கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள். செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர்களால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க முடியாது. அதிமுகவின் எந்த முடிவாக இருந்தாலும் அதை மோடிதான் தீர்மானிப்பார். வரும் 15ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவார். அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டையில் கொடி ஏற்ற மாட்டார். மக்கள் கடும் பாதிப்பால் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். என்றார். 

Related Stories: