நிலத்தடி நீர் திருடுவதை தடுக்க தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 2020 அமல்: விரைவில் அமலுக்கு வருகிறது; சிக்கினால் சிறை உறுதி

சென்னை: வணிக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் திருடுவதை தடுக்கும் வகையில் நிலத்தடி நீர் சட்டம் 2020 அமலுக்கு வருகிறது. இதன் பிறகு நீரை யாராவது திருடினால் சிறை தண்டனை நிச்சயம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு 75 சதவீதம் நிலத்தடி நீரை நம்பி தான் உள்ளனர். இந்த சூழ்நிலையில் வணிக பயன்பாட்டிற்காக ஒரு தரப்பினர் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றனர். எனவே, நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், நிலத்தடி நீர் திருட்டை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு உயர்மட்டக்குழு, தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.  

இந்த உயர் மட்டகுழுவில் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் அரசு செயலாளர் மணிவாசன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொழில்துறை, ஊரகவளர்ச்சித்துறை வேளாண்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை, வீட்டு வசதித்துறை, நிதித்துறை உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினரும், தொழில்நுட்ப குழுவில் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நிலத்தடி நீர் விவர ஆதார குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகர்  உட்பட 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டனர். இந்த குழுவினர் அரசிடம் அறிக்கை அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவான அதாவது அபாயகரமானது மற்றும் மிகவும் அபாயகரமான பகுதிகளில் வணிக ரீதியாக நிலத்தடி நீர் எடுக்க தடை விதிப்பது, நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களில் புளோ மீட்டர் பொருத்தி கண்காணிப்பது, அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்வது உள்ளிட்டவை இடம் பெறுகிறது. மேலும், நிலத்தடி நீர் திருட்டுத்தனமாக உறிஞ்சும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சிறை தண்டனை, நிலத்தடி நீர் திருட்டை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைப்பது உள்ளிட்டவை அந்த சட்டத்தில் இடம் பெறுகிறது. இந்த சட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், சட்டப்பேரவையில் வைத்து தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம் 2020 கொண்டு வரப்படுகிறது.

Related Stories: