கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க கோரிக்கை

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிலச்சரிவு பற்றி கேட்டறிந்துள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 1.30 மணிக்கு கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 30 தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 78 பேர் சிக்கினர்.இதில், செவ்வாய்கிழமை வரை 22 ஆண்கள், 20 பெண்கள், 4 சிறுவர்கள், 5 சிறுமிகள், 6 மாத குழந்தை என மொத்தம் 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட 3 பேரின் உடல்கள் இன்று பெட்டிமுடி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது. இதனால், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இடுக்கி நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்கிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: