இந்திய அளவில் விருது பெறும் காவல் துறை ஆய்வாளர்களில் 5 பேர் தமிழக காவல் ஆய்வாளர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி: ஓ.பி.எஸ் ட்வீட்

சென்னை: இந்திய அளவில் விருது பெறும் காவல் துறை ஆய்வாளர்களில் 5 பேர் தமிழக காவல் ஆய்வாளர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2020ம் ஆண்டுக்கான புலனாய்வில் சிறப்பாக பணியாற்றியதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்தியப் புலனாய்வு நிறுவனத்தைச் (சிபிஐ) சேர்ந்த 15 அலுவலர்களுக்கும், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா 10 பேருக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கும், கேரளா மற்றும் மேற்குவங்காள காவல்துறைகளைச் சேர்ந்த தலா 7 பேருக்கும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட, 21 பெண் காவல் துறை அதிகாரிகள் விருது பெறுகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாட்டிலேயே சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக காவல் துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அளவில் விருது பெறும் 21 பெண் காவல் துறை ஆய்வாளர்களில் 5 பெண் அதிகாரிகள் தமிழக பெண் காவல் ஆய்வாளர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. விருது பெறும் திருமதி.ஜி. ஜான்சி ராணி, திருமதி.எம்.கவிதா, திருமதி.ஏ.பொன்னம்மாள், திருமதி.சி.சந்திரகலா, திருமதி.ஏ.கலா மற்றும், காவல் துறை துணை ஆய்வாளர் திரு.டி.வினோத் குமார் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.

Related Stories: