தொற்று இருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடையாது: கொரோனா நோயாளிகளுடன் செவிலியர் வாக்குவாதம்

மயிலாடுதுறை: ஒரு வார சிகிச்சைக்கு பின் தொற்று இருந்தாலும் மருத்துவமனையில் இருந்து அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருப்பதாக கூறி கொரோனா நோயாளிகளுடன் செவிலியர் வாக்குவாதம் செய்யும் வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நத்தம், நிலக்கோட்டை, பழனி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தொற்று தீவிரமடைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் மகளிர் பெண் காவல்நிலைய தலைமை காவலர், ஒரு வயது குழந்தை உள்பட 25 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு உதவியாளர் உள்பட 5 பெண் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் காவல்துறையின் வஜ்ரா கலவரம் தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையரின் ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 3 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை 7 நாள் சிகிச்சைக்கு பிறகு பாதியிலேயே வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதை ஏற்றுக்கொள்ளாமல் செவிலியருடன் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உயிரிழந்த பத்திர எழுத்தரின் உடலை கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் முன்பே உறவினர்களிடம் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. பின்னர் தொற்று உறுதி செய்யப்பட பின்னர் இறுதி சடங்களில் கலந்து கொண்ட உறவினர்களும் நண்பர்களும் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: