74வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் உஷார்: கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் 74வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினவிழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மாநில எல்லைகளில் தீவிரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர கமிஷனர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குற்றப்பின்னணி உள்ள நபர்களை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், கோட்டை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டை முழுவதும்,  நவீன சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் அருண், தினகரன் போக்குரவத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னை விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் படகுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: