மத்திய அரசு அவசியமில்லை என தெரிவித்த நிலையில் இ-பாஸ் முறையை தொடர்வது ஏன்? தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும்; மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மத்திய அரசு இ-பாஸ் அவசியமில்லை என தெரிவித்த நிலையில் தமிழக அரசு இ-பாஸ் திட்டத்தை தொடர்வது ஏன் என்பது குறித்து தமிழக தலைமை செயலாளர் 4 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையை சேர்ந்த விஸ்வரத்தினம் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில்: கடந்த 4 மாதமாக ஊரடங்கினால் தொழில்கள் முடங்கி மக்கள் வாழ்வாதரம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு இ-பாஸ் அவசியமில்லை என தெரிவித்த நிலையில் தமிழக அரசு இன்னமும் இ-பாஸ் திட்டத்தை தொடர்ந்து வருகிறது.

மேற்குறிப்பிட்ட முக்கியமான நிகழ்வுகளுக்கு செல்வதற்கு பல்வேறு நபர்கள் இ-பாஸ் விண்ணப்பித்து காத்திருந்து அனுமதி கிடைக்காமல் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். தமிழகத்தில் இ-பாஸ் வழங்குதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து காவல் துறையினரால் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும் இ-பாஸ் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதால் மோசடிகளும், அதிகரித்து வருகிறது, வயதான பெற்றோர்களை சென்று பார்க்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களுக்காக ஒரு இடத்தில் இருந்து மக்கள் மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கான தனிமனித உரிமையை இ-பாஸ் திட்டம் தடுப்பது மனித உரிமை மீறல் ஆகும். இத்திட்டத்தை ரத்து செய்து சுதந்திரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த மனு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: