74வது சுதந்திர தினம் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி கொடியேற்றுகிறார்: சமூக இடைவெளியுடன் விழா நடத்த ஏற்பாடு

சென்னை: நாடு முழுவதும் வருகிற 15ம் தேதி 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை, கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார். சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையில் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15ம் தேதி, 74வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 15ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.15 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் அணிவகுப்புக்காக கடந்த 8ம் தேதியும், 10ம் தேதியும் (நேற்று) அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கோட்டை முன்பு ஏராளமான பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, சுதந்திர தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியுடன், குறைந்த அதிகாரிகள் வருகை மற்றும் குறைவான பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகிற 15ம் தேதி (சனி) நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கசவம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வீரர்கள் கூட கண்டிப்பாக முகக்கசவம் அணிந்தபடியே பங்கேற்க உள்ளனர்.சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது தலா ஒருவருக்கும், முதலமைச்சரின் நல் ஆளுமை விருது 5 பேருக்கும் வழங்கி கவுரவிப்பார். இவர்களுக்கு ரொக்கம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிக சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்டவைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் வழங்கி கவுரவிப்பார். இதற்கிடையில் சுதந்திர தினத்தன்று மாலையில் தமிழக கவர்னர் விருந்தளிப்பார். ஆனால் கொரோனா காரணமாக இந்த விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: