மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மைதானம் அமைக்க எதிர்ப்பு; மக்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி ஊராட்சியில் தாராட்சி, தொம்பரம்பேடு, பால்ரெட்டி கண்டிகை, ஆலங்காடு ஆகிய கிராமங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், தொம்பரம்பேடு கிராமத்தில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை அருகில் உள்ள 143 ஏக்கர் பரப்பளவுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மேய்த்து வந்தனர். தொம்பரம்பேடு கிராமத்தில்  ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு  ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக வந்தபோது மேய்க்கால் நிலத்தை, பொக்லைன் மற்றும் டிராக்டர் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனை பார்த்த கிராம மக்கள், “இந்த இடத்தை ஏன் சுத்தம் செய்கிறீர்கள்” என கேட்டதற்கு, அதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஊராட்சி சார்பில் சுத்தம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதைகேட்ட கிராம மக்கள் ஊத்துக்கோட்டை தாசில்தார் மற்றும் பெரியபாளையம் பிடிஒ ஆகியோரிடம், தொம்பரம்பேடு பகுதியில் எங்கள் வாழ்வாதாரமான மேய்க்கால் நிலத்தை அழித்து விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது.

இதனால் ஆடு, மாடுகள் மேய்வதற்கு வழியில்லாமல் போகிறது. எனவே, மேய்க்கால் நிலத்தை அழிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், நேற்று மீண்டும் டிராக்டர் மூலம் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதையறிந்த தொம்பரம்பேடு கிராமமக்கள் மேய்க்கால் நிலத்தை அழிக்கக்கூடாது என டிராக்டர் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையறிந்த ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவயிடத்திற்கு வந்து போராட்டகாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். மேலும், மைதானம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

Related Stories: