மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு : ரூ.3.5 லட்சம் நிதியுதவி அளித்த பின் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தேனி  : மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டி முடி தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 48 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள். மேலும், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கயத்தாறு பாரதி நகர் சென்ற செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பெற்றோரை இழந்து தவிக்கும் சரண்யா ,அன்னலட்சுமி, விஜய் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார். பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3.5 லட்சம் உதவி செய்தார். பாதிக்கப்பட்டவர்களில் சரண்யா, விஜய், ஆறுமுகம், முருகன் ஆகிய 4 பேருக்கு தலா ரூ.50,000-மும், அதுதவிர 4 பேருக்கு தலா ரூ.25,000-மும், வேன் செலவுக்கு ரூ.25,000, உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் பெற்றோருக்கு ரூ.25,000 என மொத்தம் ரூ.3 லட்சத்து 50,000 நிதியை அமைச்சர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது,நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களை இழந்து வாடும் சரண்யா, அன்னலட்சுமி மற்றும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இழந்து தவிக்கும் விஜய் ஆகியோரின் நிலை குறித்து அரசுக்கு தெரிவித்து, கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கிடைக்க தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிரந்தரமாக தங்குவதற்கு அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். நிலைமை சீரான பிறகு உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய உரிய ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

Related Stories: