கஜா புயலில் சேதமடைந்து 2 ஆண்டாக சீரமைக்கப்படாத மலைக்கிராம வளைவுச் சாலை; வாகன ஓட்டிகள் அவதி

சின்னாளபட்டி:  திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலின்போது சேதமடைந்த மலைக்கிராம சாலை, 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன போக்குவரத்தின்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு தருமத்துப்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் அமைதிச் சோலையை அடுத்த 6வது வளைவு உள்ளது. இந்த வளைவில் கடந்த 2018 நவம்பர் கஜாபுயலின் போது நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிமெண்ட் சாக்குப்பைகளில் எம்சாண்டை நிரப்பி அதனை அடுக்கி தற்காலிகமாக போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், அதன்பின் 2 ஆண்டுகளாகியும் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது சிமெண்ட் சாக்குபைகளில் இருந்த எம்.சாண்ட் கரைந்து வெறும் பைகளாக உள்ளன. இதனால், வாகன போக்குவரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: