சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.!!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரண கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதை செய்யப்பட்டு  படுகொலை செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவரும் போலீஸாரால் மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,  காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட 10 பேரில் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முருகன் ஆகிய 5  பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்த சிபிஐ 8 அதிகாரிகளில் 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது, மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், வியாபாரிகள் மரணம்  தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பால்துறைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரிடம் விசாரணையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ.  பால்துரை ஜூலை 7ல் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, கடந்த மாதம் 24-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதித்த எஸ்.எஸ்.ஐ.பால்துரை (56) நேற்று நள்ளிரவில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக உள்ள காவலர் உயிரிழந்துள்ளது மேலும், வழக்கு தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: