பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2008ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் முதன்முறையாகக் கடன் புதுப்பிப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி தனி மனிதர்கள், நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு வசதியாக திவால் மற்றும் நொடிப்பு நிலையை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

கடனைக் காலதாமதமாகத் திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த காலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முடிவடைவதையொட்டி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களுக்கான தவணைகளை மூன்று மாதம் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 27-ம் தேதி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தது.

இந்த மூன்று மாத நிறுத்திவைப்பு என்பது மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தவேண்டிய தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய அரசு முதல் முதலில் மூன்று வார காலத்துக்கு மட்டுமே முடக்க நிலை அறிவித்தது. அந்நிலையில், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் மூன்று வார காலத்துக்குப் பிறகு தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் மூன்று மாத கால தவணை நிறுத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.

Related Stories: