கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.68 கோடியில் 3,200 குவிண்டால் பருத்தி ஏலம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.68 கோடி மதிப்புள்ள 3,200 குவிண்டால் பருத்தி மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் நடந்தது. கும்பகோணம் கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் மறைமுக பருத்தி ஏலம் நடக்கிறது. அந்த வகையில்  நடந்த 9வது வார ஏலத்திற்கு தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி மற்றும் இந்திய பருத்தி கழக அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகளை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவரவர் இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி தங்களது விலைப் புள்ளிகளை மறைமுகமாக எழுதி பிரத்யேக பெட்டியில் போட்டனர். தொடர்ந்து மறைமுக ஏலம் நடந்தது. இதில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 875 விவசாயிகள் 3,212 குவிண்டால் பருத்தியை ஏலத்திற்கு எடுத்து வந்தனர். பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்திய பருத்தி கழகத்தின் சார்பில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,450, குறைந்தபட்சமாக ரூ.5,182, சராசரியாக ரூ.5,207 விலை நிர்ணயமானது. இதையடுத்து வியாபாரிகள் அதிகபட்சமாக ரூ.4,439, குறைந்தபட்சமாக ரூ.4,059, சராசரியாக ரூ.4,262 என விலை நிர்ணயமானது. அதனடிப்படையில் ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Related Stories: