தங்கம் விலை தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரிப்பு சவரன் ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை: 6 நாளில் ரூ.1,424 எகிறியது; மேலும் உயர வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து சவரன் நேற்று ரூ.42,992க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,424 உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தங்கம் விலை கடந்த மாதம் 20ம் தேதி முதல் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.41,568க்கும், 3ம் தேதி ரூ.41,592க்கும், 4ம் தேதி ரூ.41,616க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,324க்கும், சவரன் ரூ.42,592க்கும் விற்றது. இந்த விலை தங்க விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது.

இந்த விலையேற்ற சாதனை ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இந்த சாதனையை நேற்றைய விலை முறியடித்தது. அதாவது, நேற்று காலையில் கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,351க்கும், சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,808க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,374க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,992க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். கடந்த 6 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,424 அளவுக்கு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து சவரன் ரூ.43 ஆயிரத்தை தொட்டுள்ளது நகை வாங்குவோரை கதிகலங்க வைத்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்கும் என்பதால், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை கொண்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதனால் நகைக்கடைகளில் வழக்கமான நாட்களை போல விற்பனை நடைபெறுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், “கொரோனாவால் உலக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் பெரிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் அதிக அளவில் செய்ய தொடங்கியுள்ளனர். அவர்களை போல அனைத்து நாட்டு மக்களும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுதான் தங்கம் விலை அதிகரிக்க காரணம். இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது” என்றனர்.

Related Stories:

>